×

22 பெட்டிகள் நிறுத்தி வைக்க பிளாட்பார்ம் வசதி இல்லை பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு ரத்து நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் அவலம்

நாகர்கோவில், பிப். 5: பிளாட்பார்ம் நீளம் குறைவு காரணமாக பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பெட்டி இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் (16649) தினசரி காலை 5 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு மாலை 6.40க்கு திருவனந்தபுரம் வந்து சேரும். பின்னர் இரவு 8.35 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷன் வந்து சேரும். தற்போது தினசரி 20 அல்லது 21 பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் இந்த ரயிலுக்கு கூடுதல் பெட்டி ஒன்று அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்ேவ நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஒரு பெட்டி அதிகரித்தால் என்ன செய்வது? என்பது உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களை அந்த பிரிவினர் கண்டறிந்து ரயில் பெட்டி கூடுதலாக அனுமதித்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பொது இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மூன்றில் இருந்து நான்காக அதிகரிக்கப்படும் என்று ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் மூலம் கூடுதலாக 108 பேர் பயணிக்க இயலும் என்ற நிலையும் ஏற்பட்டது.

இந்தநிலையில் மங்களூர் - நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ்க்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் பெட்டி ரயில்வே ஆப்ரேட்டிங் பிரிவு அதிகாரிகளின் ஆலோசனையை தொடர்ந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. ரயில் கடைசியாக வந்து நிற்கும் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 22 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்பதற்கு பிளாட்பார்ம் வசதி இல்லை.தற்ேபாது பிரேக் வேன் உட்பட 21 பெட்டிகள் கொண்ட ரயில் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. ஒரு இரண்டாம் வகுப்பு ரிசர்வேஷன் சிட்டிங் பெட்டி கூடுதலாக அனுமதிக்கப்பட்டால் பிளாட்பார்ம் கடந்தும் ரயில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் ஒரு பெட்டி கூடுதலாக அனுமதித்தால் அவ்வாறு பிளாட்பார்ம் கடந்து நிற்கின்ற ரயில் பகுதி அடுத்த லெவல் கிராசிங் பகுதிவரை சென்று நிற்கும் நெருக்கடியுள்ள லெவல் கிராசிங் என்பதால் அது பயணிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரயில்வே கூடுதலாக வசதியை ஏற்படுத்த முயன்றாலும் ரயில் நிலையம் மேம்பாடு செய்யப்படாததால் ரயில் பெட்டியை கூட கூடுதலாக இணைக்க முடியாத அவலம் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Parasuram ,Nagercoil Junction Railway Station ,
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...